சில அரபு நாட்டினர் அமெரிக்கா வருவதை தடை செய்வேன்: டொனால்ட் டிரம்ப்

130 0

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதை தடை செய்யும் விதமாக பல கட்டுப்பாடுகளை புகுத்தினார்.ஆனால், டிரம்பிற்கு பிறகு பதவிக்கு வந்த ஜோ பைடன், இந்த உத்திரவுகளை நீக்கி விட்டார்.அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

மீண்டும் பதவிக்கு வர மும்முரமாக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், நேற்று நிவேடா மாநில லாஸ் வேகாஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:2017ல் நான் ஒரு சில அரபு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தது நினைவிருக்கிறதா? 2024 தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக இந்த கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவேன்.

பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுத்தி விடுவேன். இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன். இறுதி வரை இஸ்ரேலுடன் வேறு எந்த நாட்டை காட்டிலும் உறுதியுடன் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்பது மனித நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையேயான போர்; நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போர்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.