வடக்கில் மொத்தம் 917 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில் தற்போது 671 கிராம சேவகர்களே பணியில் உள்ளதனால் 246 கிராமசேவையாளர் பிரிவுகளில் பணி புரிவதற்கு ஆட்கள் அற்ற நிலமையே காணப்படுவதாக மாவட்டச் செயலகங்களின் தகவல்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களின் தகவல்களின் பிரகாரம் கிராமசேவகர்களிற்கான வெற்றிடங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தினில் மொத்தமாக 435 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளபோதிலும் தற்போது 333 கிராம சேவகர்களே பணிபுரிவதனால் யாழ்ப்பாணத்தில் 102 கிராம சேவகர்களிற்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது. அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில் 85 கிராம சேவகர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையில் இங்கு 51 கிராம சேவகர்களிற்கான வெற்றிடம் நிலவுகின்றது.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 95 கிராம சேவகர் பிரிவிகளில் 75 கிராம சேவகர்கள் பணியாற்றும் நிலையில் 20 கிராம சேவகர்களிற்கான வெற்றிடம் காணப்படுகின்றது. அவ்வாறே வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 102 கிராம சேவகர் பிரிவுகளில் 62 கிராம சேவகர்கள் பணியில் பணியாற்றுகின்றனர். இதனால் இங்கும் 40 கிராம சேவகர்களிற்கான பணி வெற்றிடமாகவே காணப்படுகின்றதோடு மன்னார் மாவட்டத்தின் 153 கிராம சேவகர் பிரிவுகளிலும் 123 கிராம சேவகர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் இங்கு 32 கிராம சேவகர்கள் பணி வெற்றிடம் கானப்படுவதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே வடக்கின் 5 மாவட்டத்தின் 917 கிராம சேவகர் பிரிவிற்கும் 617 உத்தியோகத்தர்கள் பணியாற்றும் நிலையில் 246 கிராம சேவகர்களிற்கான வெற்றிடம் காணப்படுகின்றது.
இதேவேளை கிராம சேவகர்கள் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களிற்கான போட்டிப் பரீட்சைகளும் இடம்பெற்றுள்ள நிலையில் நியமனம் வழங்குவதில் மட்டும் தாமதம் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது