பளை ஆதாரவைத்தியசாலை முன்னாள் மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனின் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாட்சிகளான இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த எட்டு மாதங்களாக கிளிநொச்சி மேல்நீதிமன்றிற்கு முன்னிலையாகியிராத நிலையில் இன்றைய தினம் வழக்கினை எதிர்வரும் கார்த்திகை 21ம் திகதிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
அன்றைய தினம் சட்டமா அதிபர் திணைகளத்தினை வழக்கினை கொண்டு நடத்துவதா இல்லையாவென்பது தொடர்பில் அறிக்கையிட பணித்துள்ளார்.
ஜனாதிபதியாக ஆட்சி பீடமேற தெற்கில் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய சமநேரம் புலிகளது மீள் எழுச்சியென தெற்கில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வாக்குகளை அறுவடை செய்ய பளை ஆதாரவைத்தியசாலை முன்னாள் மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கைது செய்யும் நாடகத்தை முன்னெடுத்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதேவேளை வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்ட அவரது வாகனச்சாரதி உள்ளிட்ட முன்னாள் போராளிகள் ஜவர் பின்னதாக குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி இரண்டரை வருட சிறை வாழ்க்கையின் பின்னராக விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபன் மூன்றரை வருட சிறை வாழ்க்கையின் பின்னராக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை கிளிநொச்சி மேல்நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் சிவரூபனை கைது செய்ததாக சொல்லப்படும் இராணுவ புலனாய்வு அதிகாரி நாட்டில் இல்லையென தெரிவித்து கடந்த எட்டு மாதங்களாக நீதிமன்றில் முன்னிலையாகது இருந்து வருகின்றார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் வழக்கினை எதிர்வரும் கார்த்திகை 21ம் திகதிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
அன்றைய தினம் சட்டமா அதிபர் திணைகளத்தினை வழக்கினை கொண்டு நடத்துவதா இல்லையாவென்பது தொடர்பில் அறிக்கையிட பணித்துள்ளார்.