யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமைய செயலாளர் க. நிதர்சன் ஏற்றி வைக்க, உருவப் படத்திற்கான மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர் ம. நியூட்டன் அணிவித்தார். தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவில் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆவது நினைவுதினம் வவுனியா ஊடக அமைய அலுவலகத்தில் இன்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில ஈகை சுடரினை சிரேஸ்ட ஊடகவியலாளர் கி. வசந்தரூபன் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து நிமலராஜனின் உருவப்படத்திற்கு ஏனைய ஊடகவியலாளர்கள் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் மலரஞ்சலியினையும் செலுத்தினர்.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஈழத்தில் இதுவரை உயிர்நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டதோடு நினைவு கூரலின் போது மாவட்டத்திலுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.