உள்ளூராட்சி மன்ற தேர்தலை இரத்துச்செய்ய நாம் ஒருபோதும் இணக்கவில்லை

80 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு நாங்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை. அரசாங்கம் போலிச் செய்திகளை பரப்பி வருகிறது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற  இராஜாங்க அமைச்சர்  ஜானக்க வக்குபுர சபையில் குறிப்பிடுகையில்,

அமைச்சு ஆலாேசனை குழுவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கும் அதன் வேட்புமனுக்களை ரத்துச் செய்யவும் எதிர்க்கட்சியினர் இணக்கம் தெரிவித்திருந்தனர் என குறிப்பிட்டதற்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு ஆலோசனை குழுவில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் நானும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு இணக்கம் தெரிவித்ததாக அப்பட்டமான பொய் தகவலை அரசாங்கம் தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் யாரும்  அவ்வாறான எந்தவொரு தீர்மானத்திற்கும்  உடன்படவில்லை. மாறாக நான் அந்த அமைச்சு ஆலாேசனைக்குழுவில் கலந்துகொண்டு பட்டதாரிகள் சிலரின் வேலை வாய்ப்பு பிரச்சினைகள்,கிராம உத்தியோகத்தர்கள்  சிலரின்  பிரச்சினைகள் மற்றும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகள் போன்ற விடயங்களை முன்வைத்தேன்.  அதன் பின்னர் அந்த குழுவில் இருந்து வெளியேறினேன்.

அவ்வாறு வெளியேறியதன் பின்னர்,  தேர்தலை ரத்து செய்ய கூட்டத்தில் நாங்கள் இணக்கம் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான கருத்து. இது முற்றிலும் பொய்யான செய்தி. இதனை நிரூபிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் காணொளி நாடாக்கள் இருந்தாலும், அதனை வெளியிட பிரதமர் அஞ்சுகிறார்.

அத்துடன் ஆலோசனைக் குழுக்களின் குறிப்புகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பதிவுகள் இருக்கின்றன. முடிந்தால் அந்தக் குறிப்புகளை சபையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்த செயல்முறையை நியாயப்படுத்த ஆலோசனைக் குழுவை பயன்படுத்திக்கொண்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக பேசவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தே பேசினர். ஆனால் விடயத்துக்கு பாெறுப்பான அமைச்சருக்கோ இராஜாங்க அமைச்சருக்கோ குறித்த அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க இதுவரை முடியாமல் போயிருக்கிறது.

எனவே நான் உட்பட எதிர்க்கட்சி தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது வேட்புமனுக்களை ரத்து செய்யவோ ஒருபோதும் உடன்படவில்லை.

அது தொடர்பில் அங்கு கதைக்கவும் இல்லை. மாறாக வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்குமாறே கேட்டுக்கொண்டனர். ஆனால் அரசாங்கம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை இரத்துச்செய்ய இணக்கம் தெரிவித்ததாக பொய் பிரசாரம் செய்துவருகிறது.

அவ்வாறு தேர்தலை ஒத்திவைக்க அல்லது இரத்து செய்ய யோசனை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சாத கோழைகளாக இல்லாவிட்டால் தேர்தலை நடத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.