சினோபெக் நிறுவனத்தால் பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துக்கு 40 மில்லியன் டொலர் சேமிப்பு

79 0

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செயற்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விலை சூத்திரத்துக்கமைய விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், 2024 ஜூன் வரை எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சாகன தெரிவித்தார்.

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 200 மில்லியன் டொலர் கையிருப்பினை பேணி வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சாகன, சைனோபெக் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதால் மேலும் 40 மில்லியன் டொலரை சேமிக்க முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இம்மாதத்தின் முதல் வாரத்தில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் 3 – 4 சதவீதத்தினால் குறைவடைந்த போதிலும், அதன் பின்னர் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் சகல பொருட்களின் விலைகளும் 4 சதவீதத்தினால் மீண்டும் அதிகரித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அல்ல. எவ்வாறிருப்பினும் ஈரான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் அறிவிப்புக்களை அவதானிக்கும் போது எரிபொருட்கள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கான எரிபொருள் விநியோகத்தை முழுமையாக நிறுத்தியுள்ளன. அறுபுறம் அமெரிக்கா , வெனிசுலாவுக்கான விநியோகத்தின் அளவைக் குறைத்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள் சந்தை நிலைவரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்வது கடினமாகவுள்ளது.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட முன்னரே நாம் 2024 ஜூன் வரை தேவையான எரிபொருளுக்கான விலைமனு கோரலை நிறைவு செய்து, முற்பதிவு செய்திருக்கின்றோம். அது மாத்திரமின்றி எரிபொருள் கொள்வனவுக்காக 200 மில்லியன் டொலர் கையிருப்பினையும் பேணி வருகின்றோம்.

2022இல் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பவற்றிடமிருந்து சுமார் 100 பில்லியன் ரூபா கடன் பெற்று எரிபொருட்களை இறக்குமதி செய்தோம். இதனால் மாதாந்தம் வங்கிகளுக்கு வட்டி மாத்திரம் 3 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது. எவ்வாறிருப்பினும் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதால் அந்த நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகளும் வெளிப்படை தன்மையுடன் விலை சூத்திரத்துக்கமையவே தீர்மானிக்கப்படும். அத்தோடு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையங்களும் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையால் இம்மாதத்தில் மாத்திரம் 40 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்துள்ளது. சைனோபெக் நிறுவனத்தினால் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தொகையை சேமிக்க முடிந்துள்ளது. அதற்கமைய ஏனைய இரு நிறுவனங்களும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் பின்னர் வருடத்துக்கு ஒரு நிறுவனத்தினால் 400 – 500 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று நம்புகின்றோம்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் களஞ்சிய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு குழாய் கட்டமைப்பு அவசியமாகும். ஐ.ஓ.சி. நிறுவனத்திடமுள்ள 14 தாங்களுக்கு குழாய் கட்டமைப்புக்கள் ஏற்கனவே காணப்படுகின்றன. ஆனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமுள்ள 24 தாங்கிகள் மற்றும் திருகோணமலை பெற்றோலிய முனையத்திடம் காணப்படும் தாங்கிகளுக்கு குழாய் கட்டமைப்புக்களை அமைக்க வேண்டியுள்ளது.

இதற்கு பாரிய முதலீடு தேவையாகும். தற்போது இது தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், ஐ.ஓ.சி. நிறுவனமும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்கமைய இரு தரப்பும் இணைந்து குழாய் கட்டமைப்புக்களை நிறுவிய பின்னர் அந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இதற்கு சுமார் 10 – 20 மில்லியன் டொலர் முதலீடு தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க் நிறுவனம் இலங்கையில் வைப்பொன்றினை பேணி வருகிறது. விரைவில் அனுமதிபத்திரத்துக்கான கட்டணத்தையும் செலுத்திய பின்னர் 45 நாட்களுக்குள் அந்த நிறுவனத்தின் முதலாவது கப்பல் நாட்டை வந்தடையும். அவுஸ்திரேலிய யுனைடட் நிறுவனம் இன்னும் கால அவகாசத்தை கோரியுள்ளது.

உலகில் முதல் 10 இடங்களிலுள்ள எரிபொருள் விநியோகத்தர்களே இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கின்றனர். எனவே விலைமனு கோரலில் வெற்றி பெற்று அவர்கள் எரிபொருளை விநியோகிக்காமல் இருக்க மாட்டார்கள். அதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிர்வரும் 2024 ஜூன் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

மன்னார் காற்றலை மின்உற்பத்தி நிலைய பணிகள் இறுதி கட்டத்திலுள்ளன. முன்மொழிவுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது விலையை இறுதி செய்ய வேண்டியுள்ளது. 2025 ஜனவரியாகும் போது 500 மெகாவோல்ட் மின் உற்பத்தியை நிறைவு செய்வதற்கு கால வரையறை வழங்கப்பட்டுள்ளது என்றார்.