சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்

302 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் ‘‘இரட்டை இலை’’ சின்னம் இல்லாததை அ.தி.மு.க.வின் இரு அணியினருமே பெரும் குறையாக கருதுகிறார்கள்.

முன்பெல்லாம் அ.தி.மு.க. வினர் ஓட்டு கேட்க செல்லும்போது இரண்டு விரலை ஆங்கில ‘வி’ எழுத்து வடிவில் விரித்து காட்டுவார்கள். அடுத்த வினாடியே அது இரட்டை இலை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொள்வார்கள்.இது அ.தி.மு.க.வினருக்கு மட்டுமின்றி வாக்காளர்களுக்கும் மிக, மிக எளிதானதாக இருந்தது.ஆனால் இன்று ஆர்.கே.நகரில் அத்தகைய சூழ்நிலை இல்லை. அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்தவர்கள் தொப்பியோடு அலைகிறார்கள். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் இரட்டை விளக்கு மின்கம்பத்துடன் சுற்றி வருகிறார்கள்.

தொப்பியையும், மின் கம்பத்தையும் மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அ.தி.மு.வின் இரு அணியினருக்கும் ஏற்பட்டுள்ளது. தொடர் விளம்பரம் மற்றும் இடைவிடாத பிரசாரம் மூலம் தொப்பி, மின்கம்பம் சின்னத்தை மக்களுக்கு தெரியும் வகையில் பிரபலப்படுத்தி விட முடியும் என்று இரு அணியினரும் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சிகளில் அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் நிச்சயம் ஓரளவு வெற்றி கிடைத்து விடும். இதன் காரணமாக மக்களுக்கும் இந்த தடவை இரட்டை இலைக்கு பதில் ஒன்று இரட்டை விளக்கு மின் கம்பத்துக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தெளிவான மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

ஆனால் 12-ந்தேதி ஓட்டு போட போகும் போது அவர்கள் இரட்டை விளக்கு மின்கம்பம் அல்லது தொப்பி சின்னத்தை தேடி திணற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைய பேர் போட்டியிடுவதுதான்.

60-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 4 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட கூடும். ஒவ்வொரு எந்திரத்திலும் தலா 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள்தான் இடம் பெற்றிருக்கும். இப்படி 4 எந்திரங்களிலும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் வரிசையாக இருக்கும்.

இதில் எந்த எந்திரத்தில் எந்த இடத்தில் தொப்பி அல்லது மின்கம்பம் சின்னம் உள்ளது என்பதை அ.தி.மு.க. வினர் தேட வேண்டிய திருக்கும். இந்த சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்களோடு சின்னமாக கலந்து இருக்கும் என்பதால் சாதாரண மக்களை அது திணற வைத்து விடும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் முதலில் இடம் பெறும். இதனால் 2015-ம் மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஆர்.கே.நகரில் தேர்தல்கள் நடந்தபோது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் எந்திரத்தில் முதல் சின்னமாக இருந்தது. வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந் ததுமே பட்டனை அமுக்கி விட்டு வந்து விட்டனர். 12-ந்தேதி அப்படி செய்ய முடியாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னத்தை வரிசைப்படுத்துவதற்காக 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 38-வது பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மூன்று விதமாக வரிசைப்படுத்தப் படுகின்றன.

அதன்படி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் முதலில் இடம் பெறுவார்கள். அந்த வகையில் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் அடிப்படையில் முதலில் வருவார்கள். இவர்களைத் தொடர்ந்து மாநில கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள தி.மு.க. வேட்பாளரின் பெயர் அடுத்ததாக இடம் பெறும். எனவே உதயசூரி யன், தாமரை சின்னங்கள் முதல் மின்னணு எந்திரத்தில் முதலாவதாக உயரத்தில் இருக்கும்.

இரண்டாவதாக தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்து இருந்தும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சி களின் வேட்பாளர் களும், அவர்களது சின்னங்களும் இடம் பெறும். தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சிகள் இந்த வரிசைக்கு வருவார்கள்.

மூன்றாவதாக சுயேட்சை வேட்பாளர்களின் பெயரும் அவர்களுக்குரிய சின்னங்களும் இடம் பெறும். சுயேட்சைகள் அதிகம் உள்ளதால் அவர்களது பெயர்கள் அகர வரிசைப்படி தொகுக்கப்படும்.

அப்போது தினகரன், மதுசூதனன், ஜெ.தீபா ஆகிய மூவரின் பெயரும் சுயேட்சை வேட்பாளர்களில் எத்தனைவது இடத்தில் இடம் பெறும் என்பது தெரியவரும். 4 எந்திரங்களில் அவர்களது பெயர், சின்னம் எந்த எந்திரத்தில், எந்த இடத்தில் இடம் பெறும் என்பதும் தெரிய வரும்.

வாக்காளர்கள் தொப்பி யையும், மின்கம்பத்தையும் தேடி திணறக் கூடாது என்பதற்காக, அந்த சின்னம் இருக்கும் பகுதியை வரைபடம் மூலம் மக்களுக்கு விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த அ.தி.மு.க.வின் இரு அணியினரும் திட்ட மிட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தைப் பொருத்தே வாக்காளர் கள் தொப்பி அல்லது மின் கம்பத்தை தேடி அலையாமல் எளிதில் வாக்களிக்க முடியும்.