தேர்தல் செயன்முறையைத் தாமதிக்க புதிய ஆணைக்குழுவைப் பயன்படுத்தவேண்டாம்!

136 0

தேர்தல் சட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சட்டத்தரணிகளின் கூட்டிணைவு, இந்த ஆணைக்குழுவை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் செயன்முறையைத் தாமதிப்பதற்குப் பயன்படுத்தவேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

இதுகுறித்து ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய சட்டத்தரணிகள் கூட்டிணைவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொள்கின்றோம். தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் வழிகாட்டல்களையும் ஆராய்வதுடன் தற்போதைய தேவைப்பாடுகளுக்கு அமைவாக அவற்றில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதே இந்த ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆணையாகும்.

இருப்பினும் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை உரியவாறு நடாத்துதல் தொடர்பில் ஊடகங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டல்களை வெளியிடுவதற்கான ஆணையை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று நபரொருவர் இரண்டு தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், அவற்றில் தெரிவாகும் பட்சத்தில் அவ்விரு கட்டமைப்புக்களிலும் பதவிகளை வகிப்பதற்கும் உள்ள சாத்தியப்பாடு குறித்து ஆராயுமாறு இந்த ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளமை மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும். அவ்வாறான சரத்து ஜனநாயக நாடொன்றில் தேர்தல் செயன்முறையை முற்றாகப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதுமாத்திரமன்றி இந்த ஆணைக்குழுவானது எவ்வித கலந்துரையாடல்களுமின்றி, குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளின் அனுமதியின்றியே நியமிக்கப்பட்டிருக்கின்றது.

தேர்தல் மறுசீரமைப்புக்கள் அவசியமெனினும், அதனை முன்னிறுத்திய உருவாக்கப்பட்ட தெரிவுக்குழுக்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புக்கள் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. இருப்பினும் அப்பரிந்துரைகள் குறித்து பல தசாப்தங்களாக எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் ஜனாதிபதித்தேர்தலை நடத்துவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில் (2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் – ஒக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடாத்த உத்தேசித்துள்ள நிலையில்) முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எம்மத்தியில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த ஆணைக்குழுவை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் செயன்முறையைத் தாமதிப்பதற்குப் பயன்படுத்தவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.