மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு – பெரியமுல்லை மக்கள்

138 0

கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.நேற்று புதன்கிழமை (18) பகல் முதல் இரவு வரை பெய்த மழையால், பெரிய முல்லையில் தெனியாய வத்தை, ஜயரத்ன வீதியில் இரப்பர் வத்தை , கோமஸ் வத்தை உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.

இதன் காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் பிரதேசவாசிகளும் பெரும் அசௌகரிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதன் பலர் தமது உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்குள் சென்றுள்ளனர் அந்த காட்சிகளையும் காண முடிந்தது.

 

இதைவேளை  கட்டுவ புவக்வத்தை பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதை காண முடிந்தது. சிலர் தமது வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.

பாடசாலைகளில் தற்போது இரண்டாம் தவணை பரீட்சை நடைபெறுகின்றது. இதன்காரணமாக தமது பிள்ளைகளை கட்டாயம் பாடசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளை வெள்ள நீரில் சுமந்தவாறு பாடசாலைக்கு அழைத்துச் செல்வதையும் காண முடிந்தது.

 

இந்த வருடத்தில் மூன்றாவது தடவையாக தாங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தமக்குரிய நிவாரணத்தை வழங்கவில்லை எனவும் வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்கு கேட்டு வருவதாகவும் பிரதேச வாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இந்த பிரதேசங்களை ஊடறுத்துச் செல்லும் ‘தெபா எல’ பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.