I.M.F பணியாளர் மட்ட இணக்கம் விரைவில்

54 0

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட இணக்கத்தை விரைவில் எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பணிகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு குறித்த கலந்துரையாடலில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

சீனா, இந்தியா, பாரிஸ் கிளப் மற்றும் வெளிநாட்டுப் பிணைமுறி உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கடனை மறுசீரமைக்கத் தேவையான நிபந்தனைகள் தொடர்பான இணக்கப்பாட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் ப்ளூம்பெர்க் இணையத்தளத்துடனான கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா எக்சிம் வங்கியுடன் தற்காலிக நிபந்தனைகளின் இணக்கப்பாட்டுக்கு பிறகு, 20 சதவீத குறைப்பு மற்றும் புதிய திட்டங்களை சமர்ப்பித்த ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டுவது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.