நாட்டிற்கு பொருத்தமில்லாத மோசமான சட்டங்களுக்கு பாராளுமன்றம் ஆதரவளிக்கக் கூடாது

53 0

நாட்டு மக்களின்  அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதை தடுப்பதற்காகவே  அரசாங்கம்  நிகழ்நிலை காப்பு சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது. அதனால் இத்தகைய சட்டங்களை ஆதரிக்க பாராளுமன்றம் இடமளிக்கக் கூடாது என அலிஸாஹிர் மெளலானா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்ற நீதித்துறை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்கள் சில மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

தற்போது பெரிதாக பேசப்பட்டு வரும் நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை நாட்டு மக்கள் மீது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவை அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் காணப்படுகின்றன. இலங்கை போன்ற ஜனநாயக நாட்டிற்கு இத்தகைய சட்டங்கள் எவ்வகையிலும் பொருத்தமற்றவை.

பல்லின மக்கள் வாழும் எமது நாட்டுக்கு இத்தகைய காட்டுச்சட்டம் எந்தவகையிலும் பொருத்தமில்லை.

நாட்டு மக்களின்  அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதை தடுப்பதற்காகவே  அரசாங்கம் இத்தகைய அடக்கி ஒடுக்கும் சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்கள் நலன் மற்றும் நாட்டின் நலனையும் சிந்திக்க கடமைப்பட்டுள்ள உயரிய நிறுவனமான பாராளுமன்றம் அத்தகைய சட்டங்களை ஆதரிக்க இடமளிக்கக் கூடாது. நாட்டிற்கு பொருத்தமில்லாத இரண்டு சட்ட மூலங்கள் தொடர்பில் சிலர் நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதை நாம் வரவேற்கிறோம்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தவர், கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக  செயற்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்க கட்சி தீர்மானித்திருந்தது.

அந்த தீர்மானத்துக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றில் தொடுத்த வழங்கின் தீர்ப்பு சுமார் 30 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பாகும். இதற்காக பாடுபட்ட எமது கட்சி தலைவர் உட்பட உயர்பீட உறுப்பினர்களுக்கும் இந்த வழக்கு விசாரணையில் முன்னின்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.