“பெண் கல்வியில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி” – அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்

67 0

“பெண் கல்வியில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது” என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார்.

மதுரை பாத்திமா கல்லூரியில் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை பாத்திமா கல்லூரி ஒருங்கிணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் திறன் மேன்பாடு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில், “தமிழக அரசு பெண்கள் நலனுக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலனை உறுதி செய்திடும் நோக்கில் புதிதாக வாரியம் அமைத்து செயல்படுத்தி உள்ளார்கள். இதன்மூலம் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் வேலை வாய்ப்பு,

கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி வழங்கி அவர்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் பெண்களுக்கு எந்த வகையிலும் சம உரிமை வழங்காத பிற்போக்கு சமுதாயமாக இருந்து வந்த நிலையில் கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சட்டங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். அவற்றின் பலனை பெற்று இன்றைய மகளிர் அனைத்து துறையிலும் பல சாதனைகள் புரிந்து வருகிறார். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் கருணாநிதி. அதேபோல கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

பெண் கல்வியில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. பெண் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல பெண்கள் தங்களது சிறு தேவைக்கும் பிறரை எதிர்பாராமல் சுயமாக செயல்படும் வகையில் ஊக்குவித்திட கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கி பொருளாதார சுதந்திரம் பெற்றிடும் நோக்கில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் தங்களது உடல் நலனையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்படும் போட்டிகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். சிறு தோல்விகளுக்கு துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெ.குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, கைம் பெண்கள் மற்றும் ஆதவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் ரேவதி அழகர்சாமி, துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.