பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்!

55 0

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கூட்ட அரங்குக்குள் திமுக உறுப்பினர் 2 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர் மன்றத் தலைவர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேசிய உறுப்பினர்கள், வார்டுகளில் வடிகால் வசதி இல்லை. சாக்கடை சரிவர சுத்தம் செய்வது இல்லை. வார்டுகளில் எந்த ஒருப் பணியும் முறையாக நடப்பது இல்லை. பல பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டினர்.

அப்போது, திமுகவைச் சேர்ந்த 12-வது வார்டு உறுப்பினர் மகாலட்சுமி, எனது வார்டில் எந்தப் பணியும் சரிவர நடக்க வில்லை. எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது. இது தொடர்பாக 2 முறை கோரிக்கை விடுத்து, போராட்டம் நடத்தியும் பயன் இல்லை எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டம் சிறிது நேரத்தில் முடிந்தது. பின்னர், உறுப்பினர் மகாலட்சுமி, தனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, கூட்ட அரங்கிற்குள் நகர் மன்றத் தலைவரைக் கண்டித்து சுமார் 2 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து ஆணையர் குமரன், போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை அவர் கைவிட்டார். திமுக உறுப்பினர், திமுக நகர் மன்றத் தலைவரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உறுப்பினர் மகாலட்சுமி கூறியது: “எனது வார்டு அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடமாகும்.

மேலும் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ள பகுதியாகும். இதனால், முறையான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, பலமுறை கேட்டும் நடவடிக்கை இல்லை. பல பணிகளில் முறைகேடுகள் நடக்கிறது. தூய்மை பணியாளர்கள் முறையாக பணியாற்றுவது இல்லை. இது தொடர்பாகத் தலைவரிடம் கேட்டால், அவர் எந்த பதிலும் முறையாக அளிப்பது இல்லை” எனத் தெரிவித்தார்.