பெருவர்த்தகர்களும் போதைப்பொருள் வியாபாரிகளும் ஆட்சிக்கு வரக்கூடிய தேர்தல் முறைமையே அமுலில் உள்ளது

74 0

இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் சுமார் 500 – 600 மில்லியன் ரூபாவை செலவிடக்கூடிய வர்த்தகர்களும், பெருமளவான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய நபர்களும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளக்கூடிய தேர்தல் முறைமையே நடைமுறையில் இருப்பதாகவும், அதனை சீரமைக்கும் வகையிலேயே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை சமர்ப்பித்திருப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

‘நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான புத்திஜீவிகளின் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் கடந்த திங்கட்கிழமை (16) இலங்கை மன்றக்கல்லூரியில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தனியொரு நபரை மையப்படுத்தி கட்டியெழுப்பப்பட்ட ஆட்சி நிர்வாக முறைக்குப் பதிலாக மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி நிர்வாக முறையை உருவாக்குவதன் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அங்கு உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான சட்டமூலம் எந்தவொரு நபரினதும் அழுத்தத்தின் விளைவாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், மாறாக பொதுமக்களின் தேவைப்பாடுகளை மிகவும் உயரிய மட்டத்தில் பூர்த்திசெய்வதை முன்னிறுத்தியே அச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று தற்போதைய ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னர், தான் நீதியமைச்சராகப் பதவியேற்று ஒருநாளுக்குள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகத் தெரிவித்த விஜயதாஸ ராஜபக்ஷ, குறிப்பாக தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலத்தை சமர்ப்பித்து, அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமை நாட்டுமக்களுக்குக் கிடைத்த பெருவெற்றி என்று வர்ணித்தார்.

‘தேர்தல் முறைமை மாற்றம் பிரதமர் தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். இவ்வாறு அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது அதில் அனைவரும் பங்கேற்பதற்கான ஜனநாயகத்துக்கு இடமளிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது’ எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் சுமார் 500 – 600 மில்லியன் ரூபாவை செலவிடக்கூடிய வர்த்தகர்களும், பெருமளவான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய நபர்களும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளக்கூடிய தேர்தல் முறைமையே நடைமுறையில் இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சிபீடம் ஏறுபவர்கள் வேறுபல உள்நோக்கங்களுடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ‘கோப் குழுவின் ஊடாக பெருமளவான ஊழல் மோசடிகளை நான் வெளிக்காட்டியபோது யாரும் ‘அரகலய’வில் ஈடுபடவில்லை. ஏனெனில் அது அப்போது அவர்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. பின்னர் இவை தம்மை நேரடியாகப் பாதித்த பின்னரே அனைவரும் ‘அரகலய’ எனும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே நாட்டை 225 பேரிடம் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) கையளித்துவிட்டு வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதை விடுத்து, அதுபற்றி ஆராய்ந்து பார்க்கவேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்’ எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வலியுறுத்தினார்.