பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது பதவி காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் சி.டீ விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்பிற்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நியமிக்கப்பட்ட சி.டீ. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதியோடு முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ச்சியாக மேலும் 3 மாதங்களுக்கு பதவிக்காலம் நீடிப்பு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வந்தது.
எவ்வாறாயினும் அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்கு அமைய மேலும் 3 மாதங்களுக்கு பொலிஸ் மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த பதவி நீடிப்பு காலமும் கடந்த அக்டோபர் 13 ஆம் திகதி முடிவடைந்துள்ளதால் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டி ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தொடர்ச்சியாக மேலும் 3 வாரங்களுக்கு பதவிக்காலம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் சி.டீ விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்புக்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்திருந்தது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த குழு நேற்று செவ்வாய்க்கிழமை (17) கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியலமைப்பினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்து ஒரு மணிநேரத்துக்குள் மீண்டும் பொலிஸ் மா அதிபருக்கு 3 வாரங்களுக்கு பதவிக்காலம் நீடிப்பு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைவாக நேற்று முதல் 3 வாரங்களுக்கு அவர் பதவியை தொடர்வார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவின் பீஜிங் நகரத்திலிருந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு பேரவை பொலிஸ் மா அதிபரை பதவியில் இருந்து விலக்குவதற்கு எடுத்த தீர்மானம் பாரிய தவறாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.