போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது எப்படி?

127 0

அரசாங்கத்தினால் முன்மொழிப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் என்பன தொடர்பான கரிசனைகள் குறித்து புலம்பெயர் தமிழர் அமைப்பினால் பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பின்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பெக்கா ஹாவிஸ்டோவை செவ்வாய்க்கிழமை (17) பின்லாந்து பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சர்வதேச தமிழீழ இராஜதந்திர பேரவையின் உறுப்பினர் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் அண்மையகால மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் மனித உரிமைகள்சார் நெருக்கடிகள் என்பன பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் பின்லாந்து அரசாங்கத்தினால் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்பது குறித்தும் இச்சந்திப்பின்போது ஆராய்ந்ததாக சர்வதேச தமிழீழ இராஜதந்திர பேரவை தெரிவித்துள்ளது.

சர்வதேச தமிழீழ இராஜதந்திர பேரவையானது ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி டென்மார்க்கை தளமாகக்கொண்டியங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பாகும்.