கடந்த 31 வருடங்களில் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவி மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றனர்.
ஆனால் உயர் நீதிமன்றம் எந்த உறுப்பினரதும் ஆசனத்தை ரத்துச்செய்யவில்லை. அதனால் கட்சித் தாவும் கலாசாரத்தை இல்லாது செய்யும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற நீதித்துறை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கட்சி மாறுபவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை நீக்கும் தீர்பொன்றை அண்மையில் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இது சிறந்த தீர்ப்பாகும். லலித் காமினி கட்சி மாறியதால் ஆசனத்தை இழந்த பின்னர் 31 வருடங்களின் பின்னர் இவ்வாறான தீர்ப்பு வந்துள்ளது.
இப்போது கட்சிக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்புரிமையில் இருந்து ஒருவர் நீக்கினால், அவரின் பாராளுமன்ற ஆசனம் இல்லாமல் போகும். இதுவே சட்டம்.
பெருமளவானோர் கட்சித் தாவி தங்களுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அரசியலமைப்பின் பிரகாரம் கட்சி உறுப்புரிமையில் இருந்து அவர்களை நீக்க முடியும். ஆனால் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தடையுத்தரவை பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி கடந்த 31 வருடங்களில் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி இருக்கின்றனர். அவர்களில் யாருடைய பாராளுமன்ற ஆசனத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. நீதிமன்றமும் இதனை ஆதரித்திருக்கிறது.
எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும். இதற்காக கட்சித் தாவத் தேவையில்லை. எவ்வாறாயினும் உயர்நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியமானது.
இந்நிலையில் கடந்த காலங்களை மறந்து தற்போதைய அரசியல் கலாசாரத்தை சுத்தப்படுத்த உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கு இது தொடர்பில் பொறுப்புகள் உள்ளன. இதன்படி நீதிமன்றம் முன்வர வேண்டும். இந்த பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை ஏற்படுத்த உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றார்.