மின்சார சபையினால் கணிக்கப்பட்டுள்ள 32 பில்லியன் ரூபா நட்டத்தை ஈடுகட்டுவதற்கு முன்னர் 22% கட்டண அதிகரிப்பு தேவைப்பட்ட போதிலும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு 18% மின் கட்டண அதிகரிப்பே போதுமானது என சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டு, அடுத்த திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இம்மாதத்திலிருந்தே கட்டண அதிகரிப்பு தேவையென இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.
மின்கட்டணத்தை 22 சதவீதம் அல்லது ஒரு அலகு மின்சாரத்திற்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதி கோரியது.
எவ்வாறாயினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரப்பட்ட கட்டண உயர்வை 3 காரணங்களுக்காக நிராகரித்தது, திருத்தப்பட்ட அறிக்கையை இன்றிற்குள் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.
கணித்ததை விட குறைவான தினசரி மின்சார தேவை, முன்னறிவிக்கப்பட்டதை விட அதிக நீர்மின் உற்பத்தி மற்றும் கணித்ததை விட குறைவான நிலக்கரி செலவு அந்த காரணங்கள் ஆகும்.
இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்பார்த்த சதவீதத்தினால் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், சபையின் நட்டத்தை ஈடுகட்ட முடியாது என இலங்கை மின்சார சபை மீண்டும் அறிவித்துள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசனை நிகழ்ச்சியில் அந்த சபை இதனை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த விடங்களை ஆராய்ந்த பிறகே, மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான அனுமதி வழங்குவதா? இல்லை என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டண உயர்வினால் ஆடைத் தொழி துறையில் சுமார் 25,000 பேர் வேலை இழந்துள்ளதாக தேசிய வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.