நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மக்களாணை வழங்கப்படவில்லை!

98 0

தேர்தலில் வெற்றி பெறும்  சாத்தியம் இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு எவரும் கவனம் செலுத்துவதில்லை.

தோல்வி உறுதி என்பதனால் தான் தேர்தல் முறைமை திருத்த யோசனை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

உண்மை தன்மை இருந்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல நீதியமைச்சரை நோக்கி குறிப்பிட்டார்.

தேர்தல் முறைமை திருத்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அவசியம் எமக்கில்லை, அதற்கான மக்களாணையும் வழங்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனை குறித்து நீதியமைச்சர் சபைக்கு விளக்கமளித்ததன் பின்னர் விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல,

ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என அமைச்சர் (நீதியமைச்சர்) குறிப்பிட்டார். அரசாங்கம் சமர்ப்பித்த சட்டமூலதத்தை ஆராய்ந்து ஒருசில திருத்தங்களை நாங்கள் முன்வைத்தோம்.

ஆனால் அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை. இதுவே உண்மை ஆகவே பொய்யுரைக்க வேண்டாம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை காலம் காலமாக முன்னெடுக்கப்படுகிறது.

தேர்தல் வெற்றிப்பெறுவதாக இருந்தால் எவரும் நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அவதானம்  செலுத்தமாட்டார்கள்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றிப்பெறாது என்பதால் தான் தேர்தல் முறைமை சட்ட திருத்த யோசனையை முன்வைத்துள்ளது.

மறுபுறம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க அவதானம் செலுத்தியுள்ளது. இதுவே உண்மை

உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டுமாயின் முதலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு  அடுத்த மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்திடம் உண்மை தன்மை இருக்குமாயின் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குகின்றோம் என்று குறிப்பிடுங்கள். அதன் பின்னர் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் ஒரு தீர்மானம் எடுக்கும். அதனை விடுத்து 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட விடயங்களை பேசாதீர்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான யோசனை மாத்திரமே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் ஊடகங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று செய்திகள் வெளியாகின.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அவசியம் எமக்கில்லை.அதற்கான மக்களாணையும் வழங்கப்படவில்லை என்றார்.