இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும் 5 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று புதன்கிழமை (18) காலை பாதிக்கப்பட்ட மீனவர்களும் மீனவ சங்க அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘கச்சத்தீவை மீட்டுக் கொடு’, ‘கச்சத்தீவு பகுதியில் இழந்த மீன்பிடி உரிமையை மீட்டெடுக்கவும்’, ‘இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உண்டான படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்’, ‘இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட விசைப் படகுகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க மத்திய மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றவாறு தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த மீனவர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
இன்று நடைபெறவிருந்த பாம்பன் சாலை மறியல் போராட்டத்தை அரசு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.
அதேபோல் எதிர்வரும் 27ஆம் திகதி மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுவித்து தருவதாக அரசு சார்பில் அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் சொன்னவாறு கைதான மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் நவம்பர் 1ஆம் திகதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மீனவ அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தொடர்ச்சியான பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தவிருக்கிறோம் என தெரிவித்தனர்.