சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு மருந்து கலவை தயாரித்தபோது, வெடி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்காகுளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ரெங்கபாளையம் கம்மாபட்டியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு விதிமீறலில் ஈடுபட்டதால் இந்த ஆலை உரிமம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஆலை அருகே மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று, பட்டாசு விற்பனை கடையைநடத்தி வந்தார். இந்த கடையின் பின்புறம், விதியை மீறி தகர கொட்டகை அமைத்து, பட்டாசு பரிசுப் பெட்டி (‘கிஃப்ட் பாக்ஸ்’) பேக்கிங் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார்.
நேற்று பிற்பகலில், பட்டாசு கடையில் 15 தொழிலாளர்கள் மதியஉணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பின்னால் உள்ள தகர கொட்டகையில், பரிசுப் பெட்டிகளை பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு பெட்டி மீது, பிளாஸ்டிக் தாளை ஒட்டி, இயந்திரத்தில் வெப்பப்படுத்தி தொழிலாளர்கள் ஒட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வெப்பத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அந்த தீப்பொறி, அருகே இருந்த பட்டாசு கடைக்குள் விழுந்துள்ளது. கடையில் தீபாவளிக்காக அதிக அளவில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து, சரமாரியாக வெடித்தன.
இதில், கடைக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த வடக்கு அழகாபுரியை சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டி முனீஸ்வரி (32), அழகாபுரி தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரம் பாக்கியம் (35), குருவம்மாள் (55), இந்திரா (45), லட்சுமி (28), செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுரை டிஜஜி ரம்யா பாரதி,விருதுநகர் எஸ்.பி. சீனிவாசப் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
இந்த விபத்தில் மேலும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் காயமடைந்த அழகாபுரி பொன்னுதாய் (45), செம்பட்டையான்கால் கிராமத்தை சேர்ந்த சின்னதாய் (35) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த கடையை ஆய்வுசெய்த விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன், ‘‘பட்டாசு கடையில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மற்றொரு விபத்து: இதற்கிடையே, சிவகாசி அடுத்த மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் முத்து விஜயன் என்பவரது பட்டாசு ஆலையில் நேற்று காலை பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவையை தயாரித்தனர். அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், வேம்பு (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார்.
வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர்கள் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘தீபாவளி நெருங்கும் நேரத்தில், பட்டாசு ஆலைகள், கடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி, பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 2 இடங்களில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலைகளில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயர செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.