பச்சை இலை சிவப்பு நிறமாக மாறும் வினோத தாவரம்: சுற்றுலா பயணிகள் வியப்பு

74 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பச்சை இலை சிவப்பு வண்ணமாக மாறும் ‘பாய்ன் செட்டியா’ எனும் வினோத தாவரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பல்வேறு கால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள், தாவரங்கள் உள்ளன. தற்போது பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள வட அமெரிக்கா நாடான மெக்சிகோவை தாயகமாக கொண்ட ‘பாய்ன் செட்டியா’ தாவரத்தின் பச்சை இலைகள் சிவப்பு வண்ணமாக உருமாறி மலர் போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த தாவரத்தின் பச்சை இலைகள் தானாக சிவப்பு வண்ணமாக மாறும் வினோத தன்மை கொண்டது.

தற்போது கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்காவில் ‘பாய்ன் செட்டியா’ தாவரத்தின் இலைகள் சிவப்பு வண்ணத்துக்கு உருமாறி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த தாவரத்தின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், ‘கொடைக்கானல் மலைப்பகுதியில் இலைகள் சிவப்பு வண்ணமாக மாறும் பாய்ன் செட்டியா தாவரம் உள்ளன. ஆனால், வெளிநாடுகளில் வெள்ளை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் மாறும் பாய்ன் செட்டியா தாவரங்கள் உள்ளன.தற்போது சீசன் என்பதால் இந்த தாவரத்தின் இலைகள் சிவப்பு வண்ணத்துக்கு மாறி வருகின்றன. சீசன் நிறைவடையும் போது சிவப்பு வண்ணமாக மாறிய இலைகள் உதிர்ந்து விடும்’ என்றார்.