காசாவில் உணவுப் பொருட்கள் வேகமாக தீர்ந்து வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 11-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 9,700 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் விடுத்த கெடுவால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த நகரை காலி செய்துள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர், காசாவில் இருந்து தெற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இருந்து தப்பி எகிப்துக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். காசா எல்லையை ஒட்டி தனது படைகளை இஸ்ரேல் குவித்துள்ளது. இதனால், போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேல் செல்ல இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காசாவில் உணவுப் பொருட்கள் வேகமாக தீர்ந்து வருவதாக ஐ.நா. உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபீர் எடேஃபா, “இரண்டு வாரங்களுக்கு முன்பாக போதுமான அளவு உணவு கையிருப்பு இருந்தது. ஆனால், தற்போது உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது. காசா நகரை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கெடு காரணமாகவே தற்போது மிக வேகமாக உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களை மதிப்புக் கூட்டும் 5 தொழிற்சாலைகளில் ஒன்று மட்டுமே தற்போது இயங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறை காரணமாகவும் மற்ற இயந்திரங்கள் இயக்கப்படவில்லை. நெருக்கடியான இந்த தருணத்தில் விற்பனையகங்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்வதே ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் முன் உள்ள சவாலாகும். இயங்கக்கூடிய சில பேக்கரிகளின் முன் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 10 லட்சம் யூரோ மதிப்புள்ள உணவுப் பொருட்களை காசாவுக்கு அனுப்பிவைக்க ஸ்பெயின் நடவடிக்கை எடுத்துள்ளது. “காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவே ஸ்பெயின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்னும் கூடுதலாகவும் உணவுப் பொருட்களை நாங்கள் காசாவுக்கு அனுப்பிவைப்போம்” என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.