புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

78 0

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட  அலகொன்றை ஸ்தாபிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாகவே  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இ.தொ.காவின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் தொழில்சார் சட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதன் தற்போதைய நிலைவரம் பற்றி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இலங்கையில் தொழில்சார் பல சட்டங்கள் இருந்தாலும் 17 மாத்திரமே நடைமுறையில் உள்ளன எனவும்,  தொழில் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் உள்வாங்கப்படாமலேயே உத்தேச திட்டம் வெளிவந்துள்ளது எனவும், எனவே, இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான தொழில் மதிப்பு  அங்கீகாரம் இன்னும் முறையாக கிடைக்கப்பெறாத வகையில், அதனை எப்படி தொழில்சார் நடவடிக்கையாக மாற்றுவது பற்றியும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.

அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களும் இன்று அதிகம் பாதிக்கப்படுகின்றனர், இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் மலையக மக்களும் பெரும்பாலும் இடம்பெறுகின்றனர். வீட்டு பணிப்பெண்ணாக செல்பவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே, அவர்களின் பாதுகாப்புக்காக விசேட அலகொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.

அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான நிதி உதவி உள்ளிட்ட வசதிகளை மென்மேலும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.