எமது மெய்பாதுகாவலர்கள் தெரிவுக்குழு அறைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்குங்கள்

89 0

பாதுகாப்பு செயலாளர் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளும் போது  எமது மெய்பாதுகாப்பாளர்கள் தெரிவுக்குழுவுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குங்கள் ஏனெனில் பாதுகாப்பு செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டார் என  ஐக்கிய மக்கள்  சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாதுகாப்புச் செயலாளர் பாராளுமன்றத்துக்கு அடிக்கடி வருகை தருகிறார். பாராளுமன்றத் தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.

ஆகவே அவர் கலந்துக் கொள்ளும் தெரிவுக்குழு கூட்டத்தில் நாங்கள்  பங்குப்பற்றும் போது எமது மெய்பாதுகாவலர்களை தெரிவுக்குழு அறைக்குள் உட்பிரவேசிக்க அனுமதி வழங்க வேண்டும், ஏனெனில் பாதுகாப்பு செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரின் செயற்பாட்டினால் பாராளுமன்ற உறுப்பினரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இச்சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்  சந்திம வீரக்கொடி,

நாட்டு மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்படுவது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்ட துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஒருசில விடயங்களை குறிப்பிட்டேன். அதனை தொடர்ந்து தெரிவுக்குழுவில் வைத்து எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குறிப்பிட்ட கருத்துக்கள் அடங்கிய குரல் பதிவை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களின்  உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு.எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் நீங்கள் (சபாநாயகரை நோக்கி) அனைத்து பாராளுமன்ற சம்மேளனத்தில் எவ்விடயம் பற்றி  உரையாட  போகின்றீர்கள் என்றார்.