9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

100 0

மக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையக சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் முறையாக செயல்படாத, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும்  உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலான அதிகாரிகளுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறிய பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய பொலிஸ் விசேட புலானாய்வுப்பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில்  சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தவறிழைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 120 சம்பவங்களும் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 84 பேரின் விசாரணைகளை நிறைவு செய்த பொலிஸ் விசேட புலானாய்வுப்பிரிவின் பணிப்பாளர் 64 பேரின் விடயங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

இதில் 9 அதிகாரிகளுக்கு எதிரான 13 சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 19 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 41 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தரக்ளுக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான ஒழுக்காற்று விசாரணைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.