தென்னமரவடி களப்பு பகுதியில் வெளி இடங்களில் இருந்துவரும் மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் மீன்பிடிப்பதனால் தமது வளம் சுரண்டப்படுவதோடு வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்றார்கள். பெரும்பாலான மக்கள் சிறு கடல் பகுதியான களப்பு பகுதியில் இறால், நண்டு மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் பெருமளவு பெண்கள் படகுகள், வள்ளங்கள் இல்லாத நிலையில் நீந்திச் சென்று கைகளால் நண்டுகள், இறால்களை பிடித்து தமது நாளாந்த செலவுகளை ஈடுசெய்து வருகின்றார்கள்.
இந்நிலையில், வெளி இடங்களில் இருந்து இயந்திரப் படகுகளில் வருகின்ற மீனவர்கள் தமது இடங்களில் வாடிகளை அமைத்து சட்ட விரோதமான வலைகளை பயன்படுத்தியும், கூடுகளை கட்டியும் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கடல்வளம் அழிக்கப்படுவதோடு தமக்கான கடல்வளத்தை தமது வாழ்வாதாரத்துக்காக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தட்டிக் கேட்டால், தமது வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துவதுடன் தங்களையும் தாக்குவதாகவும் அப்பகுதி மீனவர்கள் கவலையோடு கூறுகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் இல்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தொழிலுக்காக சென்று வெறுங்கையோடு வீடு திரும்ப வேண்டியுள்ளதாகவும் வேதனையடைகின்றனர்.
தென்னமரவடி மக்கள் நாட்டில் நிலவிய யுத்த சூழல் காரணமாக தங்களது அனைத்து உடமைகளும் எரிக்கப்பட்ட நிலையில் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது ஊரில் கட்டங்கட்டமாக குடியமர்ந்து வருகின்றார்கள்.
இதன்போது அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான கடல் வளமும் நில வளமும் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்ட நிலையிலும், பல அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் அந்த மக்கள் தற்போது அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.
இடம்பெயர்வுக்கு முன்னர் இக்கிராமத்தில் 285க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்திருந்தாலும், இன்றைய நிலையில் 97 குடும்பங்களே மீண்டும் கிராமத்தில் குடிபெயர்ந்து பதிவு செய்திருக்கிறார்கள்.
எனினும், இவர்களும் கூட வாழ்வாதாரத்துக்காகவும், தொழிலுக்காகவும் வந்த இடத்தை நோக்கி மீள திரும்பி சென்றுகொண்டிருக்கின்ற நிலையில், கிராமத்தில் தற்போது 50க்கும் குறைந்த எண்ணிக்கையுடைய மக்களே எஞ்சியிருக்கின்றனர்.
அத்துடன், யுத்தத்துக்கு முன்பிருந்தே காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த விவசாய நிலங்கள் பெரும்பான்மையின மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு, ‘பூஜா பூமி’ எனும் பெயரில் பௌத்த பிக்குகளினாலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த மக்களின் வழிபாட்டு தலங்களும் கூட தொல்லியல் திணைக்களம் மற்றும் பௌத்த பிக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு வழிபாடு மறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இத்தகைய சூழலில் வாழ்ந்து வரும் இந்த கிராம மக்களின் வாழ்வாதாரமும் ஏனைய உரிமைகளும் இனியும் உறுதி செய்யப்படாவிட்டால், தற்போது கிராமத்தில் எஞ்சியிருக்கிற சொற்ப எண்ணிக்கையான மக்களும் ஊரை விட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்பது கவனிக்கத்தக்கது.