யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் 2024 பாதீட்டில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயிகள் சார்பில் முன்வைத்த கோரிக்கைக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அமைச்சரிடம் தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிணறுகளை நம்பியே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சிறுபோக பயிர்செய்கைக்கான மண்ணெண்ணையில் இயங்கும் நீர்ப்பம்பிகளை விவசாயிகள் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தாலும், கடந்தாண்டு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் எமது விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு விரக்தி நிலைக்கு சென்றிருந்தார்கள்.
மீனவர்களுக்கு மாநில அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவது போல் யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை முன் வைப்பதாக தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்வரும் வருடம் 2024 பாதீட்டில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மானிய அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர்களான பிரதீபன் மற்றும் ஸ்ரீமோகன் பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.