யாழில் வறட்சியாலும் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு !

116 0

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த ஆண்டில் வறட்சியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று (15) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கலந்துகொண்டு 40 விவசாயிகளுக்கான கொடுப்பனவுகளை முதற்கட்டமாக வழங்கி வைத்தார்.

அந்த வகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பனவாக வழங்கப்பட்டன.

அத்தோடு, புதிதாக விவசாய ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக மேலும் 5 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, பிரதேச செயலர்கள், துறைசார் திணைக்கள தலைவர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.