யேர்மனி கம்பேர்க் மாநகரில் உணர்வெழுச்சியுடன் முதற்பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் நினைவு கூறப்பட்டது.
தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் தலமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வெழுச்சி நாளில் கம்பேர்க் தமிழாலய நிர்வாகியும் மாவீரர் உத்தமன் அவர்களுடைய சகோதரியும் திருமதி ராசலட்சுமி ஜெயமனோகரன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனியின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் குமணன் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களுடைய திருவுருவப் படத்திற்கு மாவீரர் லெப்டினன் அமலன் மற்றும் மாவீரர் சாந்தகுமார் அவர்களுடைய சகோதரி திருமதி சுதர்சினி பாலகுமார் அவர்களாலும் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி தமிழினி பத்மநாதன் அவர்களாலும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அகவணக்கம், சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுவணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
கனதி நிறைந்த இந்த நினைவுநாளிலே விடுதலையின் குடையின் கீழ் ஒன்றிணைந்த தமிழீழத் தேசிய மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக விடுதலைக் கானங்கள், விடுதலை நடனங்கள், விடுதலை இசைகள், கவிதைகள், உரையாற்றல் ஆகியவற்றை நிகழ்த்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் குமணன் அவர்களாலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. யோகேந்திரன் சேரன் அவர்களாளும் உணர்வுமிகுந்த சிறப்புரைகள் வழங்கப்பட்டன.
தமிழீழத் தேசியத்தின் விடுதலைக்காகவும் பெண்ணினத்தின் விடுதலைக்காகவும் காந்திய தேசமாகிய இந்தியாவினுடைய அமைதிப்படையினருக்கு எதிராகப் போரிட்டு தன்னை உரமாக்கி தமிழீழப் பெண்களுக்கு விழிப்புணர்வையும் விடுதலையுணர்வையும் விதைத்து எமது விடுதலைப்போராட்டத்தை முன்நகர்த்திய இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களுடைய வீரகாவியம் இன்றும் எமது நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையாக நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் நடைபெற்றன.
நிறைவாக நம்புங்கள் தமிழீழப் பாடல் இசைக்கப்பட்டு, எமது தாரக மந்திரம் கூறப்பட்டு வணக்க நிகழ்வுகள் எழுச்சியுணர்வோடு நிறைவுபெற்றன.