மகளிர் இடஒதுக்கீடு பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை- அண்ணாமலை

113 0

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் நாளை தனது நடைபயணத்தை தொடங்க உள்ளார்.நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவினாசியில் காலையிலும், மேட்டுப்பாளையத்தில் மாலையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.

இந்த நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இதற்காக இன்று காலை அண்ணாமலை விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தி.மு.க சார்பில் நேற்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடத்தி உள்ளனர். அதில் மகளிர் உரிமை குறித்து பேசியுள்ளனர்.2 நாட்களுக்கு முன்பு மகளிர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து தி.மு.க.வினர் அங்கிருந்த போலீசாரை மிரட்டி உள்ளனர்.

இப்படி போலீசாரையே மிரட்டும் தி.மு.க.வினர் மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.பிரதமர் மோடி எந்தவித பின்னணியும் இல்லாமல் மகளிருக்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.காங்கிரஸ் கட்சியானது தனது கட்சியை வளர்ப்பதை விட தி.மு.க.வை வளர்ப்பதில் தான் அதிக குறிக்கோளாக வைத்து அதற்கு ஏற்பவே செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் தெரிவித்த கருத்தில் இருந்தே தமிழகத்தில் பா.ஜனதா எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியை கேள்வி கேட்பது எங்களின் கடமை. அதற்கேற்றவாறே நாங்கள் கேள்விகணைகளை தொடுத்து வருகிறோம்.அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து நாங்கள் கேட்டு கொண்டே இருப்போம்.இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என கூறுகிறார்.அப்படி என்றால் அவர் தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டியது தானே. அதை விடுத்து ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அவர் பதில் சொல்லட்டும்.தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள். எனது ஒரே வேலை தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக உள்ளது.

அதனை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கிறேன்.இந்தியா கூட்டணி முழுவதும் ஒன்று சேர்ந்தாலும் வருகிற 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதாவை அவர்களால் வீழ்த்த முடியாது.இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு கவர்னர் கையெழுத்து போட மாட்டார் என நம்பிக்கை இருக்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பீக் அவர் மின் கட்டணத்தால் இங்குள்ள தொழிற்சாலைகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தொழிற்சாலைகளை குழியில் போட்டு மூடும் வேலையை அரசு பார்த்து வருகிறது.தமிழக சட்டசபையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.