என் மண் என் மக்கள்” 3-ம் கட்ட நடைபயணம்: அவினாசியில் நாளை தொடங்குகிறார் அண்ணாமலை

151 0

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கில் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை தொடங்கினார்.இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ந்தேதி தொடங்க இருந்தார். ஆனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட 3-ம் கட்ட நடைபயணத்தை அண்ணாமலை மீண்டும் நாளை 16-ந்தேதி (திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்குகிறார்.

இந்த நடைபயணத்தின் தொடக்க விழாவில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.திருப்பூர் மாவட்டத்தில் 3 நாள் நடைபயண நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி பல்லடம் தொகுதியிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

மேலும் 3-ம் கட்ட நடைபயணத்தில் மேட்டுப்பாளையம், பவானி, அந்தியூர், கோபி, , சூலூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, சங்ககிரி, குமாரபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருவரம்பூர், ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதி லால்குடியில் 3-ம் கட்ட நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.அவினாசியில் நாளை 3-ம் கட்ட நடைபயணம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்துள்ளனர்.