மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விடயங்களை மேற்கொள்ள மாட்டேன் என கூறிவரும் கடற்தொழில் அமைச்சருக்குத் தெரியாமல், மீனவர்களை சாகடிக்கும் புதிய சட்டதிருத்த மூலக் கலந்துரையாடல் இடம்பெற்றதா என தொண்டைமானாறு கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பினார்.
பாசையூர் கடற் தொழிலாளர் சங்க கட்டடத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற மீனவ அமைப்புகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1996ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடற்தொழில் சட்டம் 16 சட்ட விரோத தொழில்களை தடை செய்யும் சட்டமாக பயன்பாட்டில் உள்ளது.
குறித்த சட்டத்தினை திருத்துவதற்கான புதிய முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைபுடன் கொழும்பிலிருந்து உயர் அதிகாரிகள் கொண்ட குழு அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்தது.
சுமார் 360 பக்கங்களைக் கொண்ட வரைபில் 60 பக்கங்கள் மட்டும் தமிழில் பகிரப்பட்ட நிலையில், எஞ்சிய பக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு மீனவ சமூகங்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்திய மீனவர்களை ஒரு நொடியும் இலங்கை கடல் எல்லைக்குள் தொழில் செய்ய அனுமதிக்க மாட்டேன் என அமைச்சர் கூறுகிறார். ஆனால், புதிய சட்ட திருத்தத்தில் கடற்தொழில் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நீக்கப்பட்டு துறை சார் அமைச்சருக்கும் கடற்தொழில் திணைக்களப் பணிப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
அவர்கள் நினைத்தால் கடலில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது, கடல் எல்லைகளை குறைப்பது, தொழில் செய்ய மீனவர்களின் எண்ணிக்கையை குறைப்பது, அதிகரிப்பது என அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நான் அமைச்சரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்… உங்களுக்கு தெரியாமலா கொழும்பிலிருந்து அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து குறித்த திருத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தினார்கள்.
இந்தியா அத்துமீறிய கடற்தொழிலாளர்களால் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை அமைச்சரால் தீர்வு ஏதும் முன்வைக்க முடியவில்லை.
இவ்வாறான நிலையில் எமது மீனவ மக்களை மீண்டும் சாகடிப்பதற்காக புதிய சட்டதிருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலை கட்டுப்படுத்துகிறேன் என பல தடவைகள் கூறியும் கட்டுப்படுத்த முடியவில்லை.
வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்ட விரோத சுருக்கு வலை தொழில் இடம்பெற்று வரும் நிலையில், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சுமார் 50க்கும் மேற்பட்ட படகுகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக தொழில் செய்து வருகிறார்.
குறித்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன?
ஆகவே, தற்போது புதிய சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், மீனவ சங்கங்களின் விருப்பங்கள் இல்லாமல் குறித்த திருத்தத்தை மேற்கொள்ளக் கூடாது என்றார்.