நவம்பர் 25 இன் பின்னரே சீனக் கப்பலுக்கு அனுமதி

105 0

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-06 அனுமதி கோரியிருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னராக உள்நாட்டுக்கு வருகை தருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வீரகேசரியிடம் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன ஆய்வுக்கப்பலான ஷியான்-06 இலங்கைக்கான விஜயத்தினை இம்மாதம்  25ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தொடர்ச்சியாக கூறிவந்தது.எனினும், பாதுகாப்பு அமைப்புச்சு குறித்த கப்பலின் பிரவேசத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் கூறியிருந்தபோதும் பின்னர் அதனை இறுதி செய்கின்ற பணி வெளிவிவகார அமைச்சினுடையது என்று கூறியது.

இதேநேரம், அக்கப்பலில் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்ட ருஹ{ணு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். எனினும் நாரா நிறுவனம் எவ்விதமான அறிவிப்புக்களையும் செய்யவில்லை.

மறுபக்கத்தில் சீன விஞ்ஞான கற்கைகள் நிறுவனம் மற்றும் தென்சீனகடல் சமுத்திரவியல் கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷோலும் லீ விசேட பிரமுகர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அழைப்பிதலில் இலங்கைக்கு ஒக்டோபர் 25ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள ஷியான்-06 ஆய்வுக்கப்பலின் வரவேற்பு மற்றும் விஜய நிகழ்வில் பங்கேற்பதற்கான உறுதிப்படுதல்களை கடந்த 12ஆம் திகதிக்கு முன்னதாக மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கருத்து வெளியிடுகையில்,

சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-6 இலங்கைக்கு பிரவேசம் செய்வதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எமது இந்தத் தீர்மானம் சீனாவுக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் மாதத்தில் நிகழ்ச்சி நிரலிடப்பட்ட பிற பணிகள் இருப்பதன் காரணமாகவே குறித்த கப்பலின் பிரவேசத்தினை பிற்போடுமாறு நாம் சீனாவைக் கோரியுள்ளோம் என்றார்.

எவ்வாறாயினும், சீனாவின் தரப்பில் இந்த அறிவிப்பு தொடர்பில் எவ்விதமான பிரதிபலிப்புக்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.