இலங்கையின் பொருளாதார மற்றும் கடன்மறுசீரமைப்பு நிலைவரத்தில் முன்னேற்றம்

159 0

இலங்கையின் பொருளாதார நிலைவரம் சற்று முன்னேற்றமடைந்துவருவதாகவும், பொதுச்செயன்முறையின்கீழ் கடன்மறுசீரமைப்பு ஓரளவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜி-24 செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி அயபோ மாஷா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி மொரோக்கோவின் மரகேச்சில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டத்தின்போது இலங்கை தொடர்பில் ஏதேனும் முன்னேற்றம் அடையப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

‘இலங்கை ஓரளவுக்கு முன்னேற்றமடைந்துவருவதுபோல் தெரிகிறது. குறிப்பாக பொதுச்செயற்திட்டத்தின்கீழ் கடன்மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், அதன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே மரகேச்சில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டத்தின்போது இவ்விடயத்தில் ஏதேனும் முன்னேற்றம் எட்டப்படுமென எதிர்பார்க்கிறேன்’ என்று அயபோ மாஷா தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இலங்கை, சாம்பியா, கானா போன்ற நாடுகள் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் காண்பித்திருப்பதாக கடன்வழங்குனர் மற்றும் கடன்பெறுனர் நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும் இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகக்கடினமானதும், அவசியமானதுமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பினும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்பார்க்கப்பட்ட அடைவு தென்படவில்லை என முதலாம் கட்ட மதிப்பீட்டுப்பணிகளுக்காக இலங்கைக்கு வருகைதந்திருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.