எமது பிரச்சினைகளை அரசியலாக்காமல் தீர்வு காண வேண்டும் – அன்னராசா

72 0

எமது பிரச்சினைகளை அரசியலாக்காமல், தீர்வு காண வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி கொடுப்பது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிப்பதாக இலங்கை பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை கடற்தொழில் அமைச்சர், தமிழக கடற்தொழிலாளர்களின் படகை ஒரு நொடி கூட அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கடற்தொழிலாளர்கள் பிரச்சினையை இரு நாட்டு அரசாங்கங்களும் பேசித் தீர்த்து வைக்க வேண்டும். அதை விடுத்து அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு விடயத்தை சொன்னால் நாம் எதனை நம்புவது?

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும். பிரதமரின் கருத்தா? கடற்தொழில் அமைச்சின் கருத்தா இறுதியானதும் தீர்க்கமானது என்பதை எமக்கு அறியத்தர வேண்டும் என்றார்.