புலம்பெயரும் புத்திஜீவிகள்

275 0

ன்றைய உலகில் எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை (unemployment) காணப்படுகிறது. ஒரு சமூகத்தில் இந்த பிரச்சினையானது அரசியல், பொருளாதார துறைக்கான வளப் பயன்பாடு, தனிநபர் வருமானம், சமூக அபிவிருத்தி (Social Development) போன்றவற்றில் தாக்கம் செலுத்துகிறது. இதனால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பினை இலங்கை அரசாங்கம் அதிகமாக ஊக்குவிக்கிறது.

இன்று இலங்கையில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பல துறைகளில் முக்கியமான துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு கருதப்படுகிறது. இலங்கையின் ஊழியப்படையில் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் தங்கியுள்ளமையை இலங்கைக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

எனினும் மக்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, குறுகியகால அடிப்படையிலோ, நீண்டகால அடிப்படையிலோ வேலைவாய்ப்பினை நோக்காகக் கொண்டு தனது சொந்த நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு புலம்பெயர்கிறார்கள்.

உள்நாட்டுப் போர், வறுமை மற்றும் பொருத்தமான தொழிலின்மை காரணமாக இலங்கையிலிருந்து பெருமளவிலானோர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். சுமார் 1.5 மில்லியன் இலங்கையர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் சென்றுள்ளனர் என்று சர்வதேச குடியேற்ற ஸ்தாபனம் (International Organization for Migration) தெரிவித்துள்ளது.

1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கை பின்பற்றத் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்பவர்களின் எண்ணிக்கை முன்னைய காலங்களிலும் பார்க்க 2020 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா தொற்று, இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்தமை போன்ற காரணங்களினால் புத்திசாலிகள் வெளியேற தலைப்படுகின்றனர்.

சுமார் 1.5 மில்லியன் இலங்கையர்கள் இவ்வாறு வேலைவாய்ப்பின் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு 2000ஆம் ஆண்டு 63% ஆகவும், 2003ஆம் ஆண்டு 64%ஆக காணப்படுவதை அவதானிக்கூடியதாக இருந்தது. இதனால் மொத்த தேசிய உற்பத்தியானது 2005ஆம் ஆண்டில் 8.1%ஆக அதிகரித்துள்ளது.

பெண்களும் 2007ஆம் ஆண்டில் 52.7%ஆன பெண்களும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அநேகமான பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவே வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

வீட்டுப் பணிப்பெண்களாக பெரும்பாலும் முஸ்லிம் பெண்களே செல்கின்றனர். இந்நிலை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வது இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

நன்கு கல்வியறிவு உள்ளவர்களும் வேலைவாய்ப்பின் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்கின்றமை மிகக் கவலைக்குரியதொரு விடயமாகும். தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமையாலும், தகுதிக்கேற்ற சம்பளம் கிடைக்காமையாலும் இவ்வாறானோரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாறு வேலைவாய்ப்பின் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களில் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றனர்.

புத்திசாலிகளின் வெளியேற்றத்தினை பார்க்கின்றபோது கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், இன்று 100 பேரே பணிபுரிவதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால் வருங்காலத்தில் மின் ஆலையை நிறுத்தவேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும் அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜய தெரிவிக்கையில்,

இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்களும் எண்ணிக்கையும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என்கிறார்.

“அதேவேளை, கிராம மட்ட அரச வைத்தியசாலைகள் மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வெளியேற்றத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றன இதுவரை மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை.

மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர். அதேவேளை, அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

எமது நாட்டில் படித்தவர்கள், புத்திசாலிகள், உள்நாட்டில் நன்றாக உழைக்கக்கூடியவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால், முன்னரைப் போல அவர்களுக்கு உழைப்பு இல்லை. இது ஒரு காரணம். பொருளாதார நெருக்கடியின் விளைவு இது. அதை விட மேலதிகமான ஒரு காரணம், அதிகரித்த வரி, அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உழைப்பவர்களிடம் அதிகரித்த வரியை அளவிடத் தொடங்கியுள்ளது. அதனால் நாட்டை விட்டு புத்திசாலிகள் வெளியேறத் தொடங்கிவிட்டார்கள்.

ஏற்கனவே தமிழர்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். முதலில் போர் ஒரு காரணம். இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஒரு காரணம். அத்தோடு சேர்த்து ஏற்கனவே புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றுவிட்டார்கள் என்ற ஒரு முன்னுதாரணம் அவர்கள் முன் நிற்கிறது. அதுவும் 2009க்கு பின்னரான புலப்பெயர்ச்சிக்கு ஒரு காரணம்.

அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுபவர்களை வெளியேற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். ஆனாலும் அது கைகூடவில்லை.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அரசாங்கம் வரிகளை அதிகரித்தல், மானியங்களை வெட்டுதல், அல்லது இல்லாமல் செய்தல், தனியார்மயப்படுத்தல் அதாவது நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்றல், அரசுத்துறையில் ஆட்குறைப்புச் செய்தல் போன்ற நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக ரணில் விக்கிரமசிங்க அதைத்தான் செய்து வருகிறார்.

மாணவர்கள் பரீட்சை, போட்டியில் வெல்ல வேண்டும். அதிகளவு சற் ஸ்கோரைப் பெற வேண்டுமென்றால், இலவசக் கல்வியில் மட்டும் தங்கியிருக்க முடியாது. எனவே, போட்டிப் பரீட்சையானது மாணவர்களை பந்தயக்குதிரைகளாக மாற்றுகிறது. பந்தயத்தில் முந்தியோடும் குதிரை சித்தி பெறுகிறது. எனவே பந்தயக் குதிரையின் மனோநிலையை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உருவாக்கிவிட்டு, இலவசக் கல்வியின் மகத்துவங்களை பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது. பந்தயத்தில் முந்திய பிள்ளை மருத்துவராகவும் பொறியாளராகவும் வருகிறது.

போட்டி மனப்பான்மையானது உழைப்பையும் போட்டி ஆக்குகிறது. போட்டி போட்டுக்கொண்டு உழைப்பவர்கள் அதிக வரி கட்ட வேண்டி வரும்போது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அல்லது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கும்போது அதிக வருமானத்தை வேண்டி நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் பெற்ற கல்வியும் அவர்களுடைய சமூக அந்தஸ்தும் அவர்கள் இலகுவாக புலம்பெயர்வதற்குரிய தகைமைகளாக காணப்படுகின்றன. எனவே இங்கு பிரச்சினை போட்டிக் கல்வி உருவாக்கிய பந்தய குதிரை மனோநிலைதான்.

இவ்வாறு படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் ஒருபுறம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ் மக்கள் மத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் வெளியேறிவிட்டார்கள். இப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது. படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை நோக்கி பேரரசுகள் வருகின்றன. ஏற்கனவே சீனா வந்துவிட்டது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்ற 90 ஆண்டுகளுக்கு குறையாமல் காத்திருக்க வேண்டும். கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனா கட்டிய பட்டணமும் நிரந்தரமானது.

அதாவது பேரரசுகள் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவம் கருதி இச்சிறிய நாட்டில் எங்கோ ஓரிடத்தில் தமது கால்களை ஊன்றிக்கொள்ள விளைகின்றன.

நாட்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியத்திலிருந்து சம்பளம் பெறும் ஊழியர்கள் பொதுநிர்வாக சுற்றறிக்கையின்படி, 2023.09.15இல் ஒட்டுமொத்த அரச சேவையின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் விசேட செலவினப் பிரிவுகளில் 483,238 அலுவலர்களில் 2,709 (0.56%) பேர் சம்பளமற்ற ஐந்தாண்டு விடுமுறை பெற்றுள்ளனர். அதேபோன்று, மாகாண அரச சேவையில் உள்ள 398,528 மொத்த அலுவலர்களில் 1,170 (0.3%) பேர் வெளிநாட்டு விடுமுறை பெற்றுள்ளனர். அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் 3,879 ஊழியர்கள் (0.32%) வெளிநாடு சென்றுள்ளனர். இன்னமும் சிலர் பரிதாபத்துக்குரிய இந்த நாட்டிலிருந்து படித்தவர்களும் மூளை உழைப்பாளிகளும் எப்படி வெளியேறுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுச்சீட்டு அலுவலகத்தின் முன் வரிசைகளில் காத்துக்கொண்டு நிற்கும் நிலைமை மாறாது.

திருச்செல்வம் ஜனனீ

ஊடகக்கற்கைகள் துறை – யாழ். பல்கலைக்கழகம்