ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (14) சீனாவுக்குச் செல்கின்றது. ஒரு பாதை – ஒரு மண்டலம் முன்முயற்சி திட்டத்தின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு பெய்ஜிங்கில் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி தலைமையிலான இந்த உயர்மட்ட குழு சீனா செல்கிறது.
கடன் நிவாரணம் குறித்து சீனாவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 4.3 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது பிரதானமாக அவதானம் செலுத்தவுள்ளார்.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசின் முக்கியஸ்தர்களுடன் பெய்ஜிங்கில் பரந்துப்பட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். குறிப்பாக கடன் மறுசீரமைப்பு, கடன் மீள் செலுத்தலுக்கான தவணைகள், இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியைப் பெறல் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களுக்கு அந்த கலந்துரையாடல்களில் முன்னுரிமையளிக்கப்படவுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட மீளாய்வு அதிருப்தியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல் இவ்விஜயத்தில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன அரச தலைவர்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து நேரடியாகவே பேசவுள்ளார்.
கொவிட் பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான இலங்கையின் பொருளாதார – அரசியல் கொந்தளிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கடன் தவணைகளை செலுத்துவதற்கான இருவருட கால அவகாசத்தை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது.
எவ்வாறிருப்பினும், எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் குறித்த கால அவகாசம் நிறைவடைகின்ற நிலையில் ஜனவரி மாதத்திலிருந்து கடன் தவணைகளை சீனாவுக்கு செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதே வேளை சீன விஜயத்தின் போது கடன் தவணைகளை மீள செலுத்துவதற்கான கால எல்லையை மீண்டும் நீடிக்கும் கோரிக்கையை இலங்கை முன் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடன் குறித்த பேச்சுவார்த்தைகள் மாத்திரமின்றி முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய புதிய முதலீடுகளை பெற்றுக் கொள்ளல், புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் மற்றும் தடைப்பட்ட திட்டங்களுக்கான நிதியை பெற்று மீண்டும் திட்டங்களை ஆரம்பித்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், எக்ஸிம் வங்கியுடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடர்பான கலந்துரையாடலும், அம்பாந்தோட்டை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக 4 பில்லியன் டொலர் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இறுதி செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.