பண்ருட்டி அருகே 60 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சியில் மண்ட குளம் எனும் குளம் இருந்தது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகளால் அந்த குளம் காணாமல் போயிருந்தது. குளம் இருந்த இடமே தெரியாமல் மண் மேடாக மாறி இருந்தது.
காணாமல் போன அந்தக் குளத்தை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என கிராம பொதுமக்கள், அண்மையில் ஊராட்சிமன்ற தலைவர் விஜயலட்சுமி பிரகாஷிடம் மனு அளித்தனர். கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று காணாமல் போன அந்தக் குளம் இருந்த இடத்தை கண்டுபிடிக்க அளவீடு செய்யப்பட்டது.
அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீராகுமாரி மற்றும் அதிகாரிகள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அந்தக் குளத்தை தூர்வாரிட ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குளம் கொண்டு வரப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித் துள்ளது.