பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் அக்.30 தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனிடம் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் மனு அளித்தார்.
கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை அரசு விழாவாக நடக்கிறது. தேவர் ஒரு ஆன்மிகத் தலைவர் என்பதால் அவரது நினைவாலயத்துக்கு வரும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் தேவர் சிலைக்கு மலர் வளையம் வைக்கக் கூடாது என நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் அங்கு வரும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரனிடம் காந்திமீனாள் நடராஜன் சார்பில் அதன் நிர்வாகிகள் பழனி, அழகுராஜா, ராமமூர்த்தி ஆகியோர் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தேவர் ஒரு ஆன்மிக தலைவர். அவரது குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடும் தருணத்தில் பசும்பொன்னுக்கும் வருவோர் அவரது நினைவாலயத்தில் மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது. மலர் மாலை மட்டும் அணிவித்து வணங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இக்கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.