“எழுத்தும் கருத்தும்…” – மதுரை புத்தகத் திருவிழாவில் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

149 0

‘‘எழுத்தும், கருத்தும்தான் சமூகத்தில் புதியனவற்றை உருவாக்கும் கருவிகள்’’ என்று புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா இன்று தொடங்கியது. இந்த புத்தகத்திருவிழா வரும் 22ஆம் தேதி வரை நடக்கிறது. தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். எம்பி.சு.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘புத்தகங்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை யாருக்கும் கிடைப்பதில்லை. பெரிய செல்வந்தராக இருந்து மறைந்தால் கூட நினைவு கூற ஆள் இருக்காது. ஆனால், திருவள்ளுவர் போன்ற எழுத்தாளர்கள் நீடித்து வரலாற்றில் யாரும் அழிக்க முடியாத பதிவை உருவாக்குவார்கள்.

யாருடைய எழுத்துக்கள் அப்படி நினைவில் இருக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லும். பபாசி போன்ற நிறுவனங்கள் லாப நோக்கற்ற முறையில் இதனை நடத்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி புதிய கருத்துகள் மற்றும் புதிய நோக்கங்களை உருவாக்க வேண்டும் எழுத்தும் கருத்தும் தான் சமூகத்தில் புதியவற்றை உருவாக்கும் கருவிகள் ஆகும்’’ என்றார்.

புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு அரங்குகளில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை குழந்தைகளுக்கான ‘சிறார் சினிமா’, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் ‘கதை கதையாம் காரணமாம்’ போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அதேபோல, தினந்தோறும் மாலை 4.00 மணி முதல் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், மாலை 5.00 மணி முதல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தினந்தோறும் மாலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ‘சிந்தனை அரங்கம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளன.