ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராக இலங்கை அரசினால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு (பேர்ள்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதையும் தடுத்தனர். இருப்பினும் அதற்கு முன்னைய நாள் பௌத்த பிக்கு ஒருவர் எவ்வித இடையூறுகளுமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸார் இடமளித்தனர்.
அரச அனுசரணையுடனான காணி அபகரிப்புக்கள், தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படல், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு உள்ளடங்கலாக வட-கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த விகாரைகளின் நிர்மாணம் போன்றவற்றுக்கு தமிழ் சமூகம் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவருகின்றது.
இதற்கு முன்னதாக கடந்தகாலங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் நீதி, நினைவுகூரலுக்கான உரிமை மற்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் பொலிஸ் கண்காணிப்பு, அடக்குமுறைகள் மற்றும் மீறல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.
பல தசாப்தகாலமாகத் தொடரும் இலங்கை அரசின் குற்றங்கள் தொடர்பான தண்டனையின்மை போக்கானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் நினைவுகூரலுக்கான சுதந்திரம் போன்ற தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்திப் போராடுவோருக்குத் தீங்கு ஏற்படுத்துவதற்கான வலுவை இலங்கை பொலிஸாருக்கு வழங்கியிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கோ அல்லது யுத்தத்துக்கு வழிகோலிய அடிப்படைக்காரணிகளைக் களைவதற்கோ இலங்கை அரசு முற்படாமையானது தவறான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் அரசு கொண்டிருக்கும் கடப்பாட்டைக் காண்பிக்கின்றது.
மேலும், குறிப்பாக இலங்கை அரசின் ஒடுக்குமுறைகள், மீறல்கள் மற்றும் வன்முறைகளின் இலக்காக தமிழ்ப்பெண்களே உள்ளனர். தமது பாதுகாப்பைப் பணயம் வைத்து உண்மையைக்கோரிப் போராடிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இன்னமும் அவர்களது அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தொடர்பான பதில் வழங்கப்படவில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.