யேர்மனிய மத்திய மாநிலப்பகுதியில் வாழ்ந்துவரும் தாயக உறவுகளின் பங்களிப்பில் “புலரும் பூபாளம் 2023” நிகழ்ச்சித்திட்ட மூலமாக, தாகம் தீர்க்கும் தூய பணிக்கூற்றில் தாயகத்தின் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்ட வாகனேரி பெட்டைக்குளம் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீருக்கான நெருக்கடி நிலையினைப் போக்கும் வகையில், சுமார் 300 வரையான குடும்பங்களின் நேரடிப் பயன்பாட்டில் இரண்டு குடிநீர் அமைவிட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு, நேற்றைய தினம் (11.10.2023) மக்கள் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் அமைவிட கையளிப்பு நிகழ்வின்போது வாகனேரி, குடாமுனைக்கல், குளத்துமடு, பெட்டைக்குளம், கூளாவர்மேளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ மற்றும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த எழுபத்தைந்து (75) குடும்பங்களுக்கான காலபோக பயிர்ச்செய்கை ஊக்குவிப்பாக தலா ஐந்து கிலோ வீதமாக நிலக்கடலையும் வழங்கிவைக்கப்பட்டது.
புலரும் பூபாள செயற்குழுவின் மட்டக்களப்புத் தொடர்பாளர் குகதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர், கிராம அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், பயனாளிகளென பெருமளவானோர் மகிழ்வோடு கலந்து கொண்டதோடு, யேர்மனியவாழ் தாயக உறவுகளுக்கான தமது நன்றிகளையும் பகிர்ந்துகொண்டனர்.
குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ரூபா ஒன்பது லட்சத்து பத்தாயிரம் (910,000/=) செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.