கோட்டபய ராஜபக்ஷவின் தவறான நிர்வாகத்தினால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமும் கட்சியும் பலவீனமடைந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்முடன் இணக்கமாக செயற்பட்டால் முரண்பாடற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கலாம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக தேசிய தொழிற்றுறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை மாத்திரம் பிரதான இலக்காக அரசாங்கம் கொண்டுள்ளதே தவிர தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.இதை பிரதான குறைபாடாக கருதுகிறோம்.
நாட்டில் கடந்த வாரம் நிலவிய மழையுடனான காலநிலையால் 15 இற்கும் அதிமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்போக விவசாயம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த முறை பெரும்போக விவசாயத்தை பயனுடையதாக்கிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தோம். பொதுஜன பெரமுனவுடன் ஜனாதிபதி இணக்கமாக செயற்பட்டால் அவரால் அரச நிர்வாகத்தை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ செயற்பட்;டதால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமும்,கட்சியும் பலவீனமடைந்தது.பாரிய போராட்டத்துக்கு கட்சி என்ற ரீதியில் மீண்டும் பலமடைந்துள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் சிரேஷ்ட உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படும் போது அவர்கள் அதிருப்தியடைந்து எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானதே. ஆகவே பொதுஜன பெரமுனவுடன் இணக்கமாக செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.