மூதூர் கங்குவேலி குளம் ஆக்கிரமிப்பு

79 0

மூதூர், கங்குவேலி குளமானது சிலரினால் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரிய இயந்திரங்களைக் கொண்டு குளம் சேதமாக்கப்பட்டு வருவதன் காரணமாக குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

 

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி குளமானது சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய சம்மேளத்தினரால் மூதூர் பிரதேச செயலாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விவசாய சம்மேளனம் தெரிவிக்கிறது.

இது தொடர்பில் திருகோணமலை கச்சேரியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஆளுநரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், இதனையடுத்து ஆளுநரின் பணிப்புரைக்கமைய, திருகோணமலை பிராந்திய நீர்பாசனத் திணைக்கள பணிப்பாளரையும் சந்தித்து உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புதன்கிழமை வரை குறித்த சட்ட விரோத நடவடிக்கை தொடர்ந்ததாகவும் சம்மேளன உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

கங்குவேலி கிராமத்தில் உள்ள கங்குவேலி குளமானது கடந்த ஒரு வாரகாலமாக சிலரினால் ஆக்கிரமிக்கப்பட்டு, கனரக வாகனங்களின் உதவியுடன் குளத்தின் அணைக்கட்டு சேதமாக்கப்பட்டும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு குளத்து நீரானது வெளியேற்றப்பட்டு குளத்தினுள் விவசாயம் மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் இக்குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இக்குளமானது அந்த கிராம மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு மிக நீண்ட காலத்தின் பின்னர், 2019ஆம் ஆண்டு 24 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.

புனரமைப்பு நடவடிக்கையின்போது சிலர் குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளை சேதமாக்கி சட்ட விரோதமான முறையில் குளத்தினுள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், தாங்கள் நீண்டகாலமாக இப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி குறித்த நபர்களினால் கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2019.12.05ஆம் திகதி சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த அப்போதைய மாவட்ட செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குறித்த 11 பேருக்கும் ஸ்ரீமங்களபுர பகுதியில் மாற்றுக் காணி தருவதாக தெரிவித்து குறித்த 11 பேரையும் வெளியேற்றி குளத்தின் புனரமைப்புப் பணியை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தனர். எனினும், இதுவரைக்கும் குறித்த நபர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதும் தெரிய வருகின்றது.

இவ்வாறான நிலையில், தற்போதும் இக்குளம் மீண்டும் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாரிடம் முறையிட்டபோதும், இந்த பிரச்சினை யாராலும் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

அத்துடன், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, குளத்தின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடைசெய்து, இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என கங்குவேலி திருக்கரைசயம்பதி விவசாய சம்மேளனத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.