இணையம் ஊடாக கடன் வழங்கும் போலி செயலிகள் குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இணையம் ஊடாக உடனடியாக கடன் வழங்குனர்களுக்கு தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.
“இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன, மேலும் அந்த நிறுவனங்களுக்கு தங்கள் விவரங்களை வழங்க வேண்டாம் என மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொலதெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த மோடி தொடர்பாக கடந்த மாதங்களில் 100 முறைப்பாடுகள் கிடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதங்களை வழங்குவதாகவும், ஆவணங்கள் மட்டுமே தேவை என தெரிவிப்பதாலும் மக்கள் கடன் மோசடிகளுக்கு இரையாகிறார்கள்.
5000 ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை குறைந்த வட்டியுடன் கடன் தொகை வழங்கப்படுகிறது.
குறித்த நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் இணைப்பு மூலம் தங்களுடன் பதிவு செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொள்வதோடு, கைத்தொலைபேசிகளின் தங்களின் செயலியை பதிவிறக்க அறிவுறுத்துகின்றன.
அந்த செயலி, பயனருடைய கோப்புகள், தொடர்பு எண்கள், அழைப்புப் பதிவுகள் போன்ற கைத்தொலைபேசி ஆதாரங்களை அணுக அனுமதி கேட்கும்.
அதற்கான அனுமதியை பயனர் கொடுத்தவுடன், பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை அந்தச் செயலி பெற்றுவிடும். இது போல் கைத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை அணுகி கடன் செயலிகள், கடன் பெற்றவரை மிரட்டும் நோக்குடன், அவர்கள் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற தகவலை அவர்களுடன் தொடர்புடைய எண்களுக்கு முறைபப்பாடு செய்யும். அத்தோடு, கடனை செலுத்ததும் வரை அவர்களை தொந்தரவு செய்யும் அதே வேளையில் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
எனவே,இதுபோன்ற இணையம் ஊடான கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்பதோடு, செயலிகளை பதிவிறக்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளளது.
குறித்த செயலியை பதிவிறக்கம் செய்து இருந்தால் கைத் தொலைபேசியை மீட்டமைக்க (reset) வேண்டும். அதில் பழைய பயன்பாடுகளை மீட்டெடுக்க வேண்டாம். இந்த செயலி நீக்குவதால் (Uninstalling) மாத்திரம் தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகலை தடுக்க முடியாது.
தனிப்பட்ட தரவு பாதுகாப்பின் இரு காரணி அங்கீகாரத்துடன் (two-factor authentication) பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டைகள் (NICகள்), பாஸ்போர்ட் நகல்கள், பிறப்புச் சான்றிதழ் நகல்கள் மற்றும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTPகள்) போன்ற முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதி அல்லது வங்கி விவரங்களை தெரியாத நபர்களுடன் மக்கள் பகிரக்கூடாது.