இங்கினிமிட்டிய நீர்ப்பாசன பொறியியற் காரியாலயத்தில் கடமையாற்றிய திட்ட வடிவமைப்பாளர் ஒருவர் இக்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல், தெமடகஹ பெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த டி.பி.சமீர சதருவன் பிரேமசிறி (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் நேற்று (10) மாலை முதல் நீரில் மூழ்கி காணாமல் போனமை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (10) மாலை இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தில் கீழ் உள்ள குளங்களைச் சுற்றி அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராய குறித்த திட்ட வடிவமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த திட்ட வடிவமைப்பாளர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நேற்று (10) மாலை முதல் காணாமல் போன திட்ட வடிவமைப்பாளர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.