இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 1,500 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000 ஆகவும், பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 788 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தரை, வான், கடல் மார்க்கமாக திடீர் தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் பாலஸ்தீனத்தின் காசா எல்லை பகுதியில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. ஆயிரக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் தரை, அதிநவீன படகுகள், பாரா கிளைடர் மூலம் இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து பல மணி நேரம் தாக்குதல் நடத்தினர். சுமார் 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை சிறைபிடித்து காசா பகுதிக்கு கடத்திச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒட்டுமொத்த இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகிறது.
ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகமான காசா நகரில் அவர்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.போர் விமானங்கள், அதிநவீன ஏவுகணைகள் மூலம் ஹமாஸ்தொடர்புடைய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே இஸ்ரேலின் தென்பகுதியில் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ராணுவம், அவர்களை வேட்டையாடியது. இதில் 1,500 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “காசா எல்லைப் பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். காசா எல்லை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல்களை மீட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
ஹமாஸ் தீவிரவாதிகள் மாபெரும் தவறு செய்துள்ளனர். இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதற்கு, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இந்த தண்டனை காலம் காலமாக நினைவுகூரும் வகையில் இருக்கும்.
நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் மீது போர் திணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போரில் மாபெரும் வெற்றிபெறுவோம். ஹமாஸ் தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை போன்றவர்கள். அவர்கள்முழுமையாக அழிக்கப்படுவார்கள். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் வான் வழிதாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
இஸ்ரேலில் 1,000 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக உயிரிழப்பு தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக இஸ்ரேல் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,000 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 500 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சுமார் 2,700 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு: பாலஸ்தீனத்தின் காசா நகரில் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். அந்தநகருக்கான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் இணைப்புகளை இஸ்ரேல் ராணுவம் துண்டித்துள்ளது. இதனால் பாலஸ்தீன மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக பாலஸ்தீன சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டஅறிக்கையில், “இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 788 பேர் உயிரிழந்துள்ளனர். 4,100 பேர் படுகாயம்அடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் நிலை என்ன? கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 150 இஸ்ரேலியர்களை சிறைபிடித்தனர். அவர்கள் காசா நகரின் பதுங்கு குழிகளில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை மீட்க கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதுகுறித்து கத்தார் அரசு வட்டாரங்கள் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் 36 இஸ்ரேலிய பெண்களை மீட்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்” என்று தெரிவித்தன.
ஹமாஸ் தீவிரவாதிகள் சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்ட வீடியோவில், “எங்களது பாதாள சுரங்கங்களில் பிணைக் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர். குடியிருப்பு பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கினால் அவர்களை கொலை செய்வோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
காசா நகரில் இருந்து 1.87 லட்சம் பேர் இடம்பெயர்வு: ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகரில் இருந்து 1,87,500 பேர் வெளியேறி உள்ளனர். இவர்களில் 1,37,00 பேர் பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காசா நகரில் 790 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. 5,330 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகருக்கான குடிநீர், உணவு, மருந்து விநியோகம் தடைபட்டிருக்கிறது. இப்பகுதி மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிபொருள், மின்சாரம், தண்ணீர், மருந்துகள் இல்லாமல் மருத்துவமனைகளை நடத்த முடியாது. எனவே சர்வதேச சமுகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று கோரப்பட்டு உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வால்கர் துர்க் கூறும்போது, “காசா நகருக்கு தேவையான அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டத்துக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பில் 30,000 பேர்: ஹமாஸ் அமைப்பில் சுமார் 30,000 பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது. காசா நகர் பதுங்கு குழிகளில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து அவர்கள் தொடர்ச்சியாக ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத குழுக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த குழுக்கள் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. அதோடு இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஊடுருவ ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இஸ்ரேலின் முப்படைகளில் 1.73 லட்சம் வீரர், வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதோடு ராணுவப் பயிற்சி பெற்ற 4.65 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சம் பேர் போரில் பங்கேற்க வரவழைக்கப்பட்டு உள்ளனர்.