மாணவர்கள் மன அழுத்தத்தை தேசிய கல்வி கொள்கை குறைக்கும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

72 0

மாணவர்களின் மன அழுத்தத்தை தேசிய கல்விக் கொள்கை குறைக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உலக மனநல நாளை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் மனநலஆரோக்கியம் சார்ந்த ஆளுமைகள்மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். நிகழ்வில், மனநல பேராசிரியர் லட்சுமி எழுதிய ‘சொல்லப்படாத இந்திய மனோதத்துவத்தின் ரகசியம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: நம்மிடம் நம்பத்தகுந்த, சரியான கணக்கீடு இல்லை. ஆனால் 50 லட்சம் பேராவது நம் நாட்டில் ஆட்டிசம்பாதிப்பால் சிரமப்பட்டு வருகிறார்கள். மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனநலம் பாதித்த குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது அவசியம். இப்போதுதாய், தந்தை ஆகியோர் குழந்தைகள் அருகில் இருந்தபோதும் அவர்களை சமூக வலைதளங்கள் பிரித்துவைக்கின்றன. தாய், தந்தையர் செல்போனில் மூழ்கி இருப்பதால் குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை.

ஆன்மிகம், பயிற்சி, உடலைப் பேணுதல் போன்றவை இந்திய வாழ்வியலில் உள்ளது. மத்திய அரசு உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழிகள் உள்ளன. இக்கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.