மக்களவை தேர்தலில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம்: அண்ணாமலை தகவல்

156 0

மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை, தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில், கட்சியின் மையக் குழு கூட்டம் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, துணைதலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது தென்சென்னை, வேலூர், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார். அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டணி தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க தொடங்கியிருக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால், சென்னை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமே கிடையாது. கர்நாடகாவும் தமிழக அரசும் விளையாடி வருகிறது. இதனை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். மக்களவைத் தேர்தலை பொருத்தவரை, மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டு வருவது மற்றும் திமுக செய்த தவறை மக்களிடையே கொண்டு செல்வது குறித்து ஆலோசித்தோம். களத்தில் உள்ள பெருங்கோட்ட பொறுப்பாளர்களின் கருத்துகள், ‘என் மண், என் மக்கள் யாத்திரை’ குறித்த குறிப்புகள் போன்றவற்றை விவாதித்தோம்.

தெலங்கானா தேர்தல்: அரசியல் களத்தை பற்றி மட்டுமே ஆலோசித்தோம். தமிழகத்தில் இருந்து தெலங்கானா தேர்தல் பணிக்கு யார் யாரை அனுப்புவது என முடிவெடுத்தோம். பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாத வரை ஏற்கெனவே அப்பதவி வகித்தவர்தான் பொறுப்பாளர். ஆனால் சி.டி. ரவி, மத்திய பிரதேசத்தில் பணிகளை மேற்கொண்டிருப்பதால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருக்கிறோம். வரும் நாட்களில் 39 தொகுதிகளிலும் அதேபோல் கவனம் செலுத்துவோம். நாட்டில் எங்கேயும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை மட்டுமின்றி, சொத்துகள் பறிமுதலும் நடந்தேறி வருகின்றன.

இதன் மூலம் எந்தளவுக்கு பொது மக்களின் பணம் தனியாரின் பணமாக மாறியிருப்பது என்பது தெளிவாக தெரிகிறது. மணல் கடத்தலில் தமிழக அரசின் ஊழியர்களே பங்கு வகிக்கின்றனர். இவ்வாறிருக்க நடைபெறும் சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்கு இருக்கிறது.

சனாதன தர்மத்தை மையமாக வைத்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள திமுக தயாரா. இதில் இருந்து தப்பிக்கவே உதயநிதி ஸ்டாலின் நினைப்பார். தமிழகத்தில் ஆளும் கட்சியே எதிர்க்கட்சிபோல செயல்படுகிறது. தமிழக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல.அனைவரது வாக்குகளையும் சமமாக மதிக்கிறோம்.

தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. முஸ்லிம் சிறைவாசிகள் என்பதை விட தீவிரவாதி என்ற அடிப்படையில் அவர்களது விடுதலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது முஸ்லிம் மக்களுக்கும் எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.